General Information

கொரோனா – நாம் செய்ய வேண்டியது என்ன?

கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர் கொரோனா. சீனாவின் வூஹான் என்கிற நகரத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் இன்று உலகெங்கிலும் கால் பதித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டது.

உலக சுகாதார நிறுவனம் இந்த நிலைமையை உலக அவசர நிலை பிரகடனமாக அறிவித்துள்ளது. கொரோனா என்னும் வைரசில் பல்வேறு வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் 2019-nCoV என்னும் வைரஸ் தான் இப்பொழுது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதுவரை இந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்று ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இந்த வைரஸினால் இதுவரை உலகம் முழுவதிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் 3500 க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுவரை எத்தனையோ வைரஸ் கிருமிகள் இவ்வாறு பரவி இருந்தாலும் கொரோனா பாதிப்பை போல் இதுவரை இந்த உலகம் கண்டதில்லை. தற்போது இந்த கிருமியானது இந்தியாவிலும் தனது கால் தடத்தை பதித்து விட்டது. ஒட்டுமொத்த உலக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் இதற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
சீனாவில் சிறு நகரத்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட உடன் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு அந்த நகரத்தை தனிமைப்படுத்தி இதன்மூலம் இந்த நகரத்திலிருந்து மற்ற நகரங்களுக்கும் வைரஸ் பரவாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டது.

இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் இந்த நோய்க் கிருமியின் தாக்கத்தை சீன அரசு கட்டுப்படுத்தியது என்றே கூறலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஒட்டுமொத்த மருத்துவர்களையும் ஒரே இடத்தில் பணியமர்த்தி ஒரு பெரிய மருத்துவமனையை குறிப்பிட்ட சில நாட்களிலேயே கட்டிமுடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது. நோயால் பாதிக்கப்பட்டு யாரேனும் வீட்டில் இருந்தால் ராணுவ உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தது. இதன்மூலம் நோய்க் கிருமியானது வீட்டில் உள்ளோருக்கும் அண்டை வீட்டாருக்கும் பரவாமல் தடுக்க முடிந்தது. வேறு எந்த நாட்டாலும் இவ்வாறு துரிதமாக செயல்பட முடியுமா என்று கேட்டால் அது கேள்விக்குறியே.

இருந்தபோதும் பொறுப்பற்ற சில மக்களால் இந்த கிருமி சீனாவில் அதிகம் பேருக்கு பரவியது இதை பல சமூக ஊடகங்களின் மூலமாக நாம் காணமுடிந்தது.

இதே நிலைமை நீடித்தால் நம் கதிதான் என்ன?
இதற்கு முன்பே சார்ஸ் போன்ற வேறு சில வைரஸ் கிருமிகள் உலகத்தை அச்சுறுத்தியது அதை நம்மால் மறுக்க இயலாது ஆனால் கொரோனா போல் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் இந்த உலகம் இதுவரை கண்டதில்லை. அதேசமயம் இதனால் பாதிக்கப்பட்ட பலர் தாமாகவே குணமடைந்து வீடு திரும்பிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து நாம் வெகு விரைவில் மீள முடியும் என்று ஒரு ஆறுதலான விஷயம் நமக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் கொரோனா எப்படி?
இந்தியாவில் இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளில் தங்கி பயணம் செய்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் அரசு சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
நாம் நமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நமது கைகளைக் கழுவாமல் முகம் வாய் போன்ற இடங்களில் தொடுவதை தவிர்ப்பது சிறந்தது.

வெளிநாடு பயணங்களை தவிர்ப்பது சிறந்தது. பொது இடங்களில் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது. மின் தூக்கி பயன்படுத்துவதற்கு பதிலாக படிகளை பயன்படுத்தலாம். இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

மருந்து கண்டறியப்படாது போனால் என்ன செய்வது?
அப்படி நடக்க வாய்ப்பில்லை உரிய மருந்து கண்டறிய காலதாமதம் ஏற்படலாம் ஆனால் விரைவில் இதற்கு மருந்து கண்டறியப்படும். மருந்து கண்டறியும் முன்பே இந்த கொரோனா வைரத்தை நம்மால் வெல்ல முடியும் ஆம் நோயால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்கலாம் ஒட்டுமொத்த மக்களும் சுத்தத்தையும் சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களையே இந்த வைரஸ் அதிகமாக தாக்கியுள்ளது எனவே தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை மக்கள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்தது. இந்த கிருமி பாதித்த இடத்தில் நீங்கள் இருந்து இருந்தாலோ அல்லது பயணம் செய்திருந்தாலோ உங்களுக்கும் இந்த கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது எனவே அவர்கள் அரசாங்க உதவியுடன் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதித்து தீவிர சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களையும் வதந்திகளையும் கண்டுகொள்ளாமல் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸை முறியடிப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: