
கண்ணாடியில் முகத்தை காணும்போது முகத்தில் ஒரு பகுதி தொய்வுற்று புன்னகை உருக்குலைந்து இருந்து அடுத்த நாள் முகத்தின் ஒரு பகுதி உணர முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இதுவே முகத்தசை வாதம் ஆகும். வருடத்திற்க்கு 1000 ல் 10 நபர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மகிழ்ச்சியான ஒரே விஷயம் இது ஒரு தற்காலிகமான பாதிப்பு ஆகும். எனினும் ஒரு பயங்கரமான அனுபவத்தை தரக்கூடியது.
முகத்தில் உள்ள ஒரு பகுதியில் நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது பாதிப்பினால் முகத்தசை வாதம் ஏற்படுகிறது.
இந்த நரம்பு வீக்கம் அல்லது பாதிப்பு சின்னம்மை மற்றும் தோல் நோய்களை உண்டாக்கும் வைரஸ்களின் தாக்கத்தினால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
பெரும்பாலானோர் இந்த முகத்தசை வாதத்தை பக்கவாதம் என்று தவறாக கருதுகின்றனர். காரணம் இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகள் இருப்பதால். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல. அதே போல் இவை இரண்டிற்கும் அளிக்கப்படும் சிகிச்சைகளும் முற்றிலும் மாறுபடும் என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முகத்தசை வாதம் VS பக்கவாதம்
முகத்தசை வாதத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் இது அவசர சிகிச்சை அளிக்கும் அளவிற்கு ஆபத்தானது அல்ல.
ஆனால் பக்கவாதத்திற்கு அவசர சிகிச்சை அவசியம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கேனும் முகத்தசை தொய்வுடன் பக்கவாதத்திற்க்கான அறிகுறிகளான உணர்வின்மை, பலவீனம், பேச்சில் உளறல், இரட்டை பார்வை, அல்லது தலை சுற்றல் இவைகளில் ஏதேனும் தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவதே சிறந்தது.
மேலும் இவை இரண்டையும் வேறுபடுத்தி காட்ட ஒருசில அறிகுறிகள் உள்ளதாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
• பக்கவாதமானது உடனடியாக ஏற்படும்.
• ஆனால் முகத்தசை வாதமானது ஏற்பட சில மணிநேரமோ அல்லது சில நாட்களோ ஆகும்.
• பொதுவாக பக்கவாதம் ஏற்பட்ட நபரின் முகத்தின் கீழ் பகுதி பலவீனமாக காணப்படும். ஆனால் முகத்தசை வாதம் வந்தவர்களுக்கு முகத்தில் மேல் மற்றும் கீழ் இரண்டு பகுதிகளுமே பாதிப்பிற்கு உள்ளாகும். முகத்தசை வாதம் வந்தவர்கள் இமைகளை இமைக்கவோ, புருவங்களை அசைக்கவோ இயலாது.
மேலும் முகத்தசை வாதம் வந்தவர்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளையும் உணரலாம்
• தலைவலி அல்லது காதின் பின் புறம் வலி
• நாக்கில் ஒரு பாதி சுவை உணராமல் இருப்பது.
• ஒரு காதில் மட்டும் கேட்கும் திறன் பாதிப்பு
• ஒரு கண்ணிலிருந்து மட்டும் அதிகப்படியான கண்ணீர் வெளியேறுவது.
மூன்று நாட்களுக்குள் சிகிச்சை மேற்கொள்ளுதல்
முகத்தசை வாதம் கண்டறியப்பட்ட பின்பு மருத்துவர்கள் முகத்தில் உள்ள நரம்புகளில் ஏற்பட்ட வீக்கத்தை மருந்தின் மூலம் குறைப்பார்கள்.
இது வைரஸ் கிருமி மூலம் ஏற்பட்ட தொற்றாக இருப்பின் மருத்துவர்கள் வைரஸ் எதிர்ப்பு மருந்தை அளிப்பார்கள்.
மூன்று நாட்களுக்குள் சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் சிகிச்சை வெற்றிகரமாக முடியும். எனவே துரிதமாக மருத்துவரை காண்பது மிகவும் அவசியம்
முகத்தசை வாதம் ஏற்பட்ட நபர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் தேவைப்படும்?
இது நபருக்கு நபர் மாறுபடும், தோராயமாக மூன்று வாரங்களில் சிகிச்சை மூலம் முன்னேற்றம் காணலாம்
முகத்தசை வாதம் வந்தவர்கள் தங்களது கண்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்கள் இமைக்கவோ மூடவோ இயலாது. அவர்கள் உறங்கும் போது கண்களானது திறந்தே இருக்கும். எனவே கருவிழி காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஏதேனும் துணியை கொண்டு கண்களை பாதுகாப்பது அவசியம்.