தமிழக அரசானது சமீபத்தில் சிலவகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் தடை அவசியமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன் பிளாஸ்டிக் மூலம் நமக்கு கிடைத்த நன்மை தீமைகள் பற்றி ஆராய்வோம்.
நன்மைகள்:
இந்த எந்திர மயமான உலகில் அனைவரும் நேரத்திற்கு எதிராக எதிர் நீச்சல் போட்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த அவசர காலத்தில் நமக்கு தேவைப்படும் பொருட்களை நம்முடைய அன்றாட அலுவல்களில் இருக்கும் போதே வாங்கவும் கொண்டு செல்லவும் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளோம். இது மிகவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதும் ஒரு காரணம் ஆகும்.

நண்பர்களுடனோ குடும்பத்தினருடனோ வெளியில் செல்லும் போது பெரும்பாலான சிறிய சிற்றுண்டிகள் உணவையோ தேநீரையோ பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்புகளிலேயே பரிமாறுகின்றனர். இது பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு வேலை ஆட்களை அமர்த்துவதற்கு ஆகும் செலவை விட குறைவே. இதுவே பெரும்பாலான உணவகங்கள் பிளாஸ்டிக் கப் மற்றும் தட்டுகளை பயன்படுத்துவதற்கு காரணம். அது மட்டுமின்றி இதனால் நேரத்தை துரிதமாக பயன்படுத்த முடிந்தது.

நாம் அன்றாட அலுவல்களில் இருக்கும் போது உணவகங்களில் இருந்து வீட்டிற்கு உணவை வாங்கி செல்ல வேண்டும் என்றால் இவ்வகையான பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் கவர்களில் தான் உணவுகளை வாங்கிச்செல்வோம். உணவுகளை வாங்கிச்செல்ல பாத்திரங்களை வீட்டிற்கு சென்று எடுத்துவர நேரமோ பழக்கமோ இல்லாததும் ஒரு காரணம்.
தீமைகள்:
இப்படி பல்வேறு நன்மைகள் இதனால் கிடைத்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளை நம்மால் மறுக்க இயலாது.
பிளாஸ்டிக் பொருட்களால் வரும் முதன்மையான ஆபத்து என்னவென்றால் புற்றுநோய். ஆம் இது நமக்கு பேரதிர்ச்சியை தரலாம் ஆனால் இது மறுக்க முடியாத உண்மை.
பிளாஸ்டிக் தயாரிக்க கலக்கப்படும் இரசாயனங்களில் ஒன்று தான் ஸ்டைரென் (Styrene). அமெரிக்காவில் உள்ள மனித உடல்நல சேவை துறையானது. 2011 ஆம் ஆண்டு புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்கள் பட்டியலில் இந்த ஸ்டைரென் என்ற இரசாயனத்தை இணைத்துள்ளது.
பிளாஸ்டிக் கப்புகளில் தேனீரோ அல்லது சூடான ஏதாவது உணவை அருந்தும் போது அதில் உள்ள இரசாயனம் வெப்பத்தினால் நாம் அருந்தும் தேநீரில் கலந்துவிடுகிறது. இது தொடரும் பட்சத்தில் நாளடைவில் புற்றுநோய் வருவதற்கும் காரணமாக அமைகிறது. இது ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு நச்சுயியல் இயந்திரநுட்பம் மற்றும் வழிமுறைகள் என்னும் நாளேட்டில் வெளிவந்துள்ளது. (Journal Toxicology Mechanisms and Methods in 2009).
அடுத்ததாக இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பின்பு இது மண்ணோடு சேர்ந்து மக்குவதில்லை. மாறாக இது நம் மண்ணையும் மலட்டுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது. இதனால் அந்த மண்ணானது எந்த விதமான விளைச்சலையும் அளிக்காது. இது நம் வருங்கால சந்ததியையே பாதிக்கும்.
எனவே பிளாஸ்டிக் மூலம் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நம்மையும் நம் வருங்கால சந்ததியையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பது தவிர்க்க முடியாத மற்றும் வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம் ஆகும்.
—————————— ——-
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்
காவேரி புற்றுநோய் சிகிச்சை மையம்
தென்னூர்