விபத்துக்கு பிறகு, உடலின் மேற்புறம் ஏற்பட்டுள்ள காயங்களை முதலில் கவனிக்க வேண்டும், இதில் சிறு வெட்டுக்கள் முதல் மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காயங்கள் வரை அடங்கும். இதில் சில உயிர் அபாயமுள்ள நிலைமைகளும் அடக்கம், அதற்கு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியமானது. விபத்து காயத்தினை தாண்டி ஒரு முக்கிய விஷயத்தினை சாதாரணமாக நாம் கவனத்தில் கொள்வதில்லை. அது விபத்துக்குள்ளானவரின் மன நிலை. பெரும்பாலோனோர் தங்கள் மனம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என்பதை அறிந்திருப்பதில்லை. இன்னும் சிலர் அதற்கான அறிகுறிகளை மறைக்கவே நினைப்பார்கள். இதற்கு மருத்துவர் உதவி தேவையில்லை என்று அவர்கள் நினைக்கலாம். இது மிகப்பெரிய தவறு. மேற்புற காயங்களைப்போலவே உள்மன காயங்களுக்கும் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும்.
உங்களால் பார்க்க முடியாத காயங்கள்.
திடிரென்று ஏற்படும் விபத்து போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்படும்போது , நமது உடல் அட்ரீனலின் எனும் ஹார்மோனை சுரக்கிறது. அந்த ஹார்மோன் நமது உடல் மற்றும் மன இயக்கத்தினை வேகப்படுத்துகிறது. இது காயத்தின்வலி அளவினை குறைக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு நாட்கள் செல்ல செல்ல குறையும், அது குறையும்போது இயற்கையாகவே நாம் பலவீனமாக உணர்வோம், மன அழுத்தம் இருக்கும், கவலை ஏற்படும். இது பொதுவாக நடப்பது தான், அட்ரீனலின் குறையும்போது இது நிகழும். நமது உடலானது சில நாட்களிலேயே விபத்துக்கு முந்தைய நிலைமைக்கு திரும்பி விடும். சில நாட்கள் கடந்தும் அறிகுறிகள் மறையா விட்டால், விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தநிலைமையை நிச்சயம் நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடாது தகுந்த மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு நீங்கள் திருப்ப வேண்டும். அப்போது இந்த நிகழ்வின் பாதிப்பு சுமை உங்கள் மனதினில் இருக்கக்கூடாது.
உணர்வு அதிர்ச்சியின் அறிகுறிகள்
உணர்வுபூர்வமாக ஏற்படும் அதிர்ச்சியினை எளிதாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் உணர்வு வெளிப்பாடுகள் எல்லாம் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் அவை நாட்கள் செல்ல செல்ல மறையாமல் இருந்தால் அப்போது அவர்கள் உணர்வு அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். உதாரணமாக, விபத்து நடந்த பிறகு சில மணி நேரங்கள் பொறுத்து அந்த விபத்தின் நிகழ்வு மிக மெதுவாக திரும்ப, திரும்ப மனதினில் ஓட துவங்கும், அதன் விளைவுகளை ஆராயத் தூண்டும் .இது இயற்கையான ஒன்று தான்.ஆனால் இது சில நாட்களாய் தொடர்ந்தால், நிச்சயமாய் சிகிச்சை தேவை. அதைப்பற்றியே அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலோ, அது சம்மந்தமான இடங்களுக்கு செல்லும்போது மீண்டும் விபத்து ஞாபகம் திரும்ப திரும்ப வந்தாலோ, இரவு தூக்கத்தில் விபத்து பற்றி பயங்கர கனவுகள் வந்தாலோ நீங்கள் உணர்வு அதிர்ச்சியை குணப்படுத்திடும் நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
பொதுவாக விபத்துக்கு பிறகான உணர்வுபூர்வமான பிரச்னைகள் எவையென்றால் :
- போஸ்ட் -ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் (PSTD )
- மன அழுத்தம்
-
பதட்டம்
-
தூக்கமின்மை
உணர்வு அதிர்ச்சியை கையாள்வது எப்படி ?
விபத்திற்கு பிறகு தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி உள்ளேயே வைத்துக்கொள்வது தான் பெரும்பாலானோர் செய்வது. இந்த சமயத்தில் அடுத்தவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளி வர மிகச்சிறந்த ஒரு வழியாகும். நமது குடும்பதினரும், நண்பர்களும் தான் இதற்கு மிகவும் சரியானவர்கள். நம்மை சரியாய் அறிந்து வைத்திருப்பவர்கள் அவர்களால் தான் நம்மை புரிந்து கொள்ள முடியும். நம்மிடம் ஏதேனும் மாற்றம் இருந்தால், நம்மால் உணரமுடியாததை, அவர்களால் உடனே கண்டுபிடுக்கவும் முடியும். நீங்கள் உணர்வு அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் இதற்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சையை உடனே துவங்கிட வேண்டும். உணர்வு அதிர்ச்சியினை மறைத்திட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. வெளிக்காயங்கள் போலத்தான் இதுவும், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாவது நிச்சயம்.