குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் அவர்களின் மனநலத்தை சீராக்குவதுடன், கற்பனைத்திறன் மற்றும் அறிவுகூர்மையை அதிகரிக்கிறது என்று மனநல மருத்துவர் கூறுகிறார்.
குழந்தைகளின் உணர்வுநிலை வளர்ச்சிக்குக் கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. எப்படியென்றால், ஒருவரோடு நான் உரையாடும்போதுதான் அவர் என்ன நினைக்கிறார், அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியைப் பெற முடியும். ஒருவர் கதை சொல்கிறார் என்றால், கைகளை நீட்டி, ஆட்டி சைகைகளோடு சொல்வார். அதைப் பார்த்ததும், கதையோடு பயணம் செய்யும் குழந்தைகளின் மூளையின் சிந்திக்கும் திறன் வளரும். ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களைக் (Perspective) கணிக்க முடியும்.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, ‘ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை எத்தனைக் கதைகளைக் கேட்கிறதோ, எத்தனைக் கதைகளைப் படிக்கிறதோ அவைதான் ஏழு வயதில் அந்தக் குழந்தையின் படிக்கும் திறனையும் மொழித்திறனையும் முடிவு செய்கின்றன’ என்று கூறுகிறது. கதைகளில் சத்தத்துக்கான குறியைக் (Symbol) கேட்டு வளரும் குழந்தைகளின் எழுத்தும், வாசிப்பும், கற்பதைப் புரிந்துகொள்ளும் திறனும் மற்ற குழந்தைகளைவிடச் சிறப்பாக இருக்கிறது.
மூளை என்பது நாம் கவனிக்காததைக்கூடப் பதிவு செய்துகொள்கிறது. அதை `Nondeclarative Memory’ என்று சொல்கிறோம். ‘நீங்கள் எப்படி சைக்கிள் ஓட்டுகிறீர்கள்?’ என்று வினாவாகக் கேட்டால், சொல்லத் தெரியாது. ஆனால், ஒரு சைக்கிளைக் கொடுத்தால் ஓட்டிவிடுவீர்கள். அதேபோல உங்களின் மூன்று வயதுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைத் இப்போது நினைவுகூர முடியாது. ஆனால், அது நீங்கள் பேசும் மொழியில் கலந்திருப்பதை உணர முடியும். நமக்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கதைபோலவே புரிந்துகொள்கிறோம். அதனால்தான் ஒரு தோல்வியின்போது கதை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். இதிலிருந்து மீளவும் நம்பிக்கைக் கதைகளே நமக்கு உதவுகின்றன.
மன வளர்ச்சிக்கும் உறவுகளுக்கும் அச்சாரமாகக் கதைகள் இருக்கின்றன. இதனால் ஏற்படும் நம்பிக்கையும் பிடிப்பும் மனச் சோர்வடையும் நேரங்களில் குழந்தைகளை மீளச் செய்கின்றன. மனதளவில் மற்றவர்களின் எண்ணவோட்டத்தையும் குழந்தைகள் புரிந்து கொள்ள உதவுகின்றன.’’
THE GREAT KAUVERY HOSPITAL.,