ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை நமது மூக்கின் ஒரு புறத்தில் அடைப்பு ஏற்படுவதும் மறுபுறம் அடைப்பின்றி இருப்பதும் தொடர்ந்து நடக்கும். இதை பெரும்பாலானோர் உணர்வதில்லை
எனினும் மூக்கின் ஒரு துவாரத்தில் மட்டும் அடைப்பு அதிகமாக ஏற்படின் நாம் அடை எளிதில் உணர்கிறோம். இது மூக்கின் உட்புறத்திசுக்களின் வீக்கம் அல்லது மூக்கை உட்புறம் இரண்டாக பிரிக்கும் செப்டம் எனப்படும் தடுப்புச்சுவர் வளைந்து இருப்பதனாலும் ஏற்படுகிறது.
மேலும் சில காரணங்கள்:
ஒருக்களித்து தூங்குதல் : இவ்வாறு தூங்கும் போது எந்த மூக்கு துவாரம் கீழே இருக்குமோ அதில் அடைப்பு ஏற்படும்.
மூக்கின் உட்புறத் தடுப்புச்சுவர் வளைந்து இருத்தல்: இதனால் ஒரு புறம் மட்டும் தொடர்ந்து மூக்கடைப்பு ஏற்படும்.
அழற்சி மற்றும் மூக்கின் கோழைப்படலத்தில் ஏற்படும் கட்டிகள் (பாலிப்ஸ): நாள்பட்ட அழற்சி மற்றும் பாலிப்ஸ் மூக்கடைப்பு ஏற்படுத்தும். அறிதாக, கட்டிகளாலும் இது ஏற்படலாம். நாள்பட்ட மற்றும் தொடர்ந்த மூக்கடைப்பிற்கான காரணத்தை காது மூக்கு தொண்டை நிபுணர் மூலம் அறியலாம்.
மூக்கில் வெளியிலிருந்து போடப்பட்ட பொருட்களால் மூக்கடைப்பு: சிறுகுழந்தைகள் சிறிய பொருட்களை மூக்கில் போட்டுக் கொள்வதால் ஒரு புறம் மூக்கு துவாரத்தில் அடைப்பு ஏற்படுகிறது. மூக்கிலிருந்து அடர்த்தியான சளி மற்றும் சீழ் வந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.