வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க…
இங்கு கொளுத்தும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அக்னி நட்சத்திரம் கூட ஆரம்பமாகவில்லை, ஆனால் வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆகவே மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் உண்ணும் உணவுகளின் மீது சற்று அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். குறிப்பாக கோடையில் உடல் வறட்சி மற்றும் தாகத்தைத் தணிக்கும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
கோடையில் மாங்காய் விலைக்குறைவில் கிடைக்கும். இதை கோடைக்காலத்தில் சாப்பிட்டால், வெயிலால் உடல் வறட்சி அடைந்து, ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுவது தடுக்கப்படும்.
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இது செரிமானத்திற்கு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே வெயில் காலத்தில் தயிரை மோராகவோ, லஸ்ஸியாகவோ, ஸ்மூத்தியின் மூலமோ உட்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளியாக இருந்தால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், பார்லியை உட்கொள்ளுங்கள். அதுவும் பார்லியை சூப்பாகவோ, கஞ்சியாகவோ தயாரித்து கோடையில் குடித்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.
வெயில் காலத்தில் ஆங்காங்கு முலாம் பழ ஜூஸ்கள் தள்ளுவண்டிகளில் விற்கப்படும். இந்த பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும் உள்ளது. இப்பழம் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாப்பதோடு, செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 88 சதவீதம் உள்ளது. எனவே வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்ல மறந்துவிட்டால், வெள்ளரிக்காயை வாங்கி சாப்பிடுங்கள். இது உங்கள் தாகத்தைத் தணிப்பதோடு, வெயிலின் தாக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும்.